<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/32921109?origin\x3dhttps://makudam.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

சிங்கள இனவாதத்தின் வரலாற்றுத் தொடர்ச்சி சிங்களவர்களால் பேணப்பட்டு வருகிறது.

Sunday, June 17, 2007 by R. கரன்

-தெ. றஞ்சித்குமார்-

இலங்கைத் தீவில் 1833இல் பிரித்தானியார்களால் ஒன்றிணைக்கப்பட்ட தமிழர், சிங்களவர்களின் தனித்தனி இராச்சியங்கள் பின் சிங்களவர்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டதும் வெறி பிடித்த இனவாதிகள் கூறு தங்கள் ஒடுக்கு முறையை தீவிரப்படுத்த ஆரம்பித்தனர். இதன் விளைவுகள் தமிழர் இரண்டாவது பட்சமாக்கப்பட்டதும். தமிழ் மக்கள் ஒதுக்கப்பட்டதும் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பும்.

ஆரம்ப கட்டமாகவே எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டரநாயக்காவின் சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வரப்பட்டு இனப்பாகுபாடு தீவிரமாக்கப்பட்டது..

சிங்கப்பூரில் பல்மொழிப் பிரச்சினை தோன்றிய போது லீ குவான் யூ எல்லா மொழிகளுக்கும் அரச ஏற்பினை ஏற்படுத்தி, ஆங்கில தமிழ், சீன, மலாய மொழிகளுக்கு அரச மொழி அந்தஸ்தைக் கொடுத்து மொழிவாரியான போட்டி பொறாமைகளையும் அரசியல் அல்லல்களையும் தவிர்த்துக் கொண்டார்.

ஆனால், இங்கு அவ்வாறு நடைபெறவில்லை. தனிப்பட்ட கோபதாபங்கள், பதவி ஆசை, புகழ், குடும்ப நலன்கள் ஆகியன சிங்களத் தலைவர்களைத் தூரப் பார்வையுடன் சிந்திக்காது தடுத்தன. அதற்கு மற்றொரு காரணம் பொறாமை என்றும் கூறலாம். ஆங்கிலேயர் காலத்தில் தமிழ்ப் பேசும் மக்கள் தங்கள் கடும் உழைப்பாலும் கல்வியாலும். கெட்டித்தனத்தாலும் அரச நிர்வாகத்தில் முக்கிய இடம்பெற்றனர். தொழில் ரீதியான மேம்பாட்டிலும் கொடிகட்டிப் பறந்தனர். இதைச் சிங்கள மக்களும், சிங்களத் தலைவர்களும் வெகுவாக விரும்பவில்லை. தங்களில் இருக்கும் தரக் குறைவின் நிமித்தமே, தகைமைக் குறைபாட்டின் நிமித்தமே, தமிழர்கள் தரணி ஆளத்தகுதி பெற்றிருந்தார்கள் என்பதை சிங்களத் தலைவர்கள் ஏற்க மறுத்தனர். ஆங்கிலேயர்கள் இனங்களைக் பிரித்து அரசியல் இலாபம் பெறவே தமிழர்களுக்குப் பக்கச் சார்பாக நடந்து கொண்டனர் என்று கூறி தமிழர்களின் நேர்மையான கடும் உழைப்பினை, நடவடிக்கைகளைக் கொச்சைப்படுத்தினர்.

ஆங்கில மொழியில் இரு இனத்தவர்களும் பரீட்சைகள் எழுதிய போது தகுதி பெற்றவர்கள் பெரும்பாலும் தமிழ் பேசும் மாணவர்களே என்ற உண்மை ஆங்கிலேயர் காலத்தில் மட்டுமல்லாது சுதந்திரத்தின் பின்னர் 1956 வரையிலும் கூட அவ்வாறே இருந்ததைக் காணலாம். வைத்தியத் தொழில், சட்டத் தொழில், பொறியியற் தொழில், கணக்காளர் தொழில், எழுது வினைஞர் தொழில் மட்டுமல்லாது வேறு பல துறைகளிலும் தமிழர்கள் தான் 1956 வரை பொதுப் பரீட்சைகளில் முன்னணியில் நின்றனர்.

ஆங்கிலேயர் பக்கச் சார்பாக நடந்து கொண்டார்கள் என்றால் 1948 தொடக்கம் 1956 வரையில் பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆட்சிக்குட்பட்டிருந்த காலத்தில், ஆங்கில மொழி நிலைத்திருந்த அக்காலத்தில் எப்படித் தமிழ் மாணவ மாணவியர் சகல துறைகளிலும் முன்னணியில் நின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது. இரு இன மக்களும் ஒருமித்து ஆங்கிலத்தில் கல்வி கற்ற கல்லூரிகளில் பொதுப் பரீட்சைகளில் (விகிதாசார அடிப்படையில்) யார் பரிசுகளைத் தட்டிச் சென்றுள்ளார்கள் என்று ஆராய்ந்து பார்த்தால் தெரிய வரும். ஆகவே, சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வந்ததே தெற்கில் உள்ள தமிழ் மக்கள் சுதந்திர இலங்கையிலும் கொடி கட்டிப் பறப்பதை நிறுத்தி ஓரம் கட்டுவதற்கே.

சிங்கள பௌத்தர் மனதில் அப்பொழுது ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்து வந்திருந்தது. அதாவது சிங்கள பௌத்தர்கள் பெரும்பான்மையினராக வாழும் இந்த நாட்டில் தமிழர்கள் பெருவாரியான கல்வி, தொழிற்கல்வி தொடர்பான துறைகளில் முன்னிலை வகித்தனர். தமிழ்ப் பேசும் முஸ்லிம்கள் வணிகத்தில், வாணிபத்தில் முன்னிலை வகித்தனர். இந்திய வம்சாவளித் தமிழர்கள் பெருந்தோட்ட வேலைகள் யாவற்றையும் தமதாக்கிக் கச்சிதமாகச் சிறந்த பணியைப் பல அல்லகள், தடங்கல்கள், வறுமை நிலை போன்றவற்றின் மத்தியிலும் செய்து தொழிலாளர்கள் என்ற முறையில் முன்னிலையில் நின்றனர்.

சிங்களக் கிறீஸ்தவர்கள் கல்வி நிலையங்களை உருவாக்கி, நல்ல கல்லூரிகளை வழிநடத்தி வந்தனர். ஆனால், சிங்கள ஆட்சியாளர் கையில் அதிகாரம் வந்தும் அவர்;களால் உருப்படியாக் சிங்கள பௌத்தர்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஒரு ஏமாற்றம் அவர்களைப் பீடித்திருந்தது. அதை நிவர்த்தி செய்யத் தம்மை மேல் நிலைப்படுத்தாது, சிறுபான்மையினரைத் துன்புறுத்தித் துரத்த நடவடிக்கை எடுத்தார்கள் அவர்கள். தமிழ் பேசும் தொழிலாளர்களுடன் தொடங்கிய அவர்களின் பாரபட்ச நடவடிக்கைகள் அடுத்து சிங்களம் பேசா அனைவரையும் பாதிக்கும் விதத்தில் அமைந்தன. அது தான் சிங்களம் மட்டும் சட்டம்.

சில காலத்தின் பின் கத்தோலிக்கக் கல்லூரிகளைப் பாதிக்கும் விதத்தில் சட்டம் இயற்றப்பட்டது. முஸ்லிம் அமைச்சர் பதியுதீன் மகமூட் காலத்தில் கல்விப்படித்தரச் சமநிலைப்படுத்தும் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. புதிய சட்டங்கள் கொண்டு வந்து அந்நிய செலாவணி சம்பந்தமாகப் பெருந் தனவந்தர்களாக இருந்த முஸ்லிம் வியாபாரிகளைக் கம்பி எண்ண வைத்தனர்.

கிறிஸ்தவராகப் பிறந்து அரசியலுக்காகப் பௌத்தர்களாக மாறிய பண்டாரநாயக்க, ஜே.ஆர்.ஜெயவர்தன போன்றோர்களே தாம் உண்மையான பௌத்தர்கள் என்றும், பௌத்த சமயத்தினர் தம்மை ஏற்க வேண்டும் என்றும் நாட்டின் நலன் கருதாமல் வருங்கால சந்ததியினர்களின் நல்வாழ்வினைக் கருத்தில் எடுக்காமல், ஜனநாயக அரசியல் தமக்குத் தந்த அதிகாரத்தை சுயநல காரணங்களுக்காகப் பாவித்தார்கள்.

1952 இல் பிரதமமந்திரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது டட்லி கூறிய சில கருத்துகள் மனதில் நிலைநிறுத்தப்படக் கூடியவை. எவர் எந்த மொழியைப் பேசினாலும், எந்த மதத்தைக் கடைப்பிடித்தாலும், எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் மற்றவர்கள் அனைவருவடனும் சரிசமமான நிலையில் இருந்து வாழ்ந்து வரக்கூடியவாறு என்னுடைய நிர்வாகம் அமைந்திருக்கும் " என்று கூறியே அவர் 30.03.1952 அன்று பதவி ஏற்றார். ஆவர் கூறிய கருத்து உண்மையாதனதா அல்லது அரசியலுக்கானதா என்பதை அறிவதற்க முன்னமே சிக்கல்கள் உருவாகிவிட்டன.

1951 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12 ஆம் திகதி அன்று டி.எஸ்.இன் அமைச்சர் அவையின் சிரேஷ்ட அமைச்சரான எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா தமது மந்திரிப் பதவியை இராஜிநாமா செய்து புதியதொரு கட்சியை (ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை) ஆரம்பித்திருந்தார். இலங்கைக்கு சமஷ்டி அரசியல் முறையே சிறந்தது என்று முன்னர் கருத்து வெளியிட்டிருந்த அவர் ஆளும் கட்சியில் இருந்து வெளியேறியதும் எதனைச் சொன்னால் பதவிக்கு வரலாம் என்று சிந்தித்து ஆட்சியில் அமர்வதற்காக "24 மணிநேரத்தில் தனிச் சிங்களம்" என்ற வாக்குறுதியை முன் வைத்து 1956 ஆம் ஆண்டில் சிங்கள மக்களிடையே அமோக வெற்றியைப் பெற்று ஆட்சி அமைத்தார். அதற்கு முன் இரு பிரதம மந்திரிகள் டி.எஸ்.ஐ.அடுத்த ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் பதவி ஏற்றிருந்தனர்.

கொத்தலாவலையின் ஒரு செயலே எஸ்.டபிள்யூ.ஆர்.டி.யை " 24 மணித்தியாலயத்தில் தனிச்சிங்களம்" என்ற கோரிக்கையை தேர்தலில் முன்வைக்க வெகுவாக உதவியது. பிரதம மந்திரியாக அவர் யாழ்ப்பாணம் சென்றபோது அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த உற்சாகத்தில் சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளுக்கும் உத்தியோக பூர்வ அந்தஸ்தை வழங்கப் போவதாக அவர் வாக்களித்தார். இதற்கு எதிராகவே எஸ்.டபிள்யூ.ஆர்.டியின் "சிங்கள் மட்டும்" கோஷம் எழுந்தது. அதனால் சிங்கள மக்களின் அமோக வாக்குகளுடன் பண்டார நாயக்க ஆட்சிப்பீடத்தை கைப்பற்றிக் கொண்டார்.

இனவாதத்தை முன்வைத்து சிங்கள மக்களின் அமோக அதரவைப் பெற்று ஆட்சிக்குவரும் நிலை இன்று வரை சிறிலங்காவில் தொடர்கிறது. நவீன உலகின் மாற்றங்களோடும், சிந்தனைகளோடும் இணைந்து கொள்ள சிங்களவர்கள் இன்னும் தயாராக இல்லை. ஆட்சியதிகாரத்தை தக்கவைப்பதற்காக சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை வளர்ப்பதும், இனவாதத்தால் வளர்hக்கப்பட்ட அந்த மக்கள் தொடாந்தும் இனவாதிகளையே தங்கள் தலைவர்களாக தேர்ந்தெடுப்பதும் சிறிலங்காவின் வரலாற்றுத் தொடாச்சியாக காணப்படுகிறது.

மூலம்: ஈழமுரசு

வெளிநாடுகள் சிறிலங்காவின் போர்நடவடிக்கைகளுக்கு உதவிக்கொண்டிருக்கும் வரை மனிதஉரிமை மீறல்களைத் தடுக்க முடியாது.

by R. கரன்

-மனோகரன்-

இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக ஏற்பட்டுவரும் சர்வதேசக்கவனம் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்மக்களுக்குச் சாதகமானதாக, நீதியின்பாற்பட்டதாக அமையுமா என்ற கேள்வி தற்போது பலதரப்பினரிடையேயும் எழுந்திருக்கிறது.

ஏற்கனவே வெளிச்சக்திகளின் தலையீடு அல்லது பங்கேற்பு என்பவற்றால் எந்த நன்மையும் பெறாத தமிழ்மக்கள் இப்போது புதிதாக உருவாகிவரும் வேறொரு கவனம் குறித்து இவ்வாறு சிந்திப்பது தவிர்க்க முடியாதது.

இருபது ஆண்டுகளுக்கு முன்பான இந்தியத்தலையீடும் பின்னர் அண்மையில் நோர்வேயின் பங்கேற்பும் இலங்கையின் இனப்பிரச்சினைத்தீர்வில் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

எந்தத்தரப்பாக இருந்தாலும் அந்தத்தரப்பினரால் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் எல்லாவற்றையும் ஏப்பம் விடக்கூடியதொரு அரசியல் சாணக்கியத்தை சிறிலங்கா அரசு கொண்டிருக்கிறது. அதில் அது பெரும் வெற்றியும் கண்டிருக்கிறது.

சிங்களத்தரப்பு கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஆட்சியிலிருந்துகொண்டே தமிழ்மக்களை ஒடுக்கிவருகிறது. இது பகிரங்கமானது. தன்னுடைய ஆட்சியில் தன்னைவிட விகிதாசாரத்தில் குறைந்த பிரதிநிதித்துவமுடைய சிறுபான்மையினரை அது கடுமையாக ஒடுக்கி வருகிறது.

அடிப்படையில் இது பாரிய குற்றத்துக்குரியது. நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் நீதி கிடைக்கக் கூடியவாறான அரசியல் அமைப்பே இலங்கையில் இல்லை என்பது முதலாவது தவறான காரியம்.

ஆட்சியிலுள்ள சிங்களத்தரப்பினரைத்தவிர ஏனையோர் அச்சம் கொள்ளக்கூடியவாறாகவே சிறிலங்கா அரசாங்கத்தின் ஆட்சியும் அதிகாரமும் இருக்கிறது.

தவிர இந்தச்சமூகங்களின் மீது போரும் நெருக்கடிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் பாரிய மனித உரிமை மீறல்களாகும். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடருகின்ற மனித உரிமை மீPறல்கள்.

ஆனால், இப்போதுதான் இவற்றையெல்லாம் சர்வதேச சமூகம் கண்டுள்ளது. அல்லது, அப்படிக்கண்டுள்ளது போல காட்டுகிறது.

ஆனாலும், பகிரங்கமாக சிறிலங்கா அரசினதும், சிங்களத்தரப்பினதும் இத்தகைய நீதி மறுப்பு நடவடிக்கைகளுக்கு கண்டனமோ எதிர்ப்போ ஏற்பட்டிருப்;பது ஒரு முக்கியமான நிகழ்ச்சியே. இது தமிழரின் விடுதலைப்போராட்டத்துக்கும் தமிழ்மக்களின் அவல நிலைக்கும் கிடைத்திருக்கும் ஒரு சாதகமான வாய்ப்பே.

ஆனால், இந்த நிலைமையையிட்டு தமிழர்தரப்பு மீண்டும் நம்பிக்கை கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏனெனில் தமிழ்மக்களுக்கு நீதி கிடைக்கக்கூடிய எந்த முயற்சியையும் அதற்கெதிரான கண்ணோட்டத்துடனேயே சிங்களத்தரப்பு பார்க்கின்றது.

இங்கே தமிழ் மக்களுக்குச்சாதகமானது, நீதியானது என்பதிலேயே ஏகப்பட்ட சிக்கல்களுண்டு. இந்தச்சொற்றொடர் ஏற்படுத்தும் விளைவுகள் என்ன என்பதை இங்கே பார்க்கவேண்டும்.

இதைச் சிங்களத்தரப்பினர் புரிந்து கொள்ளும் விதம் வேறானது. அவர்களைப்பொறுத்தவரையில் தமிழ்மக்களுக்கு நீதியோ நியாயமோ கிடைக்கவேண்டும் என்று என்றைக்கும் விரும்பியதில்லை. அப்படி யாராவது இந்தப்பிரச்சினையை நீதியான முறையில் அணுகித்தீர்க்க வேண்டுமென்று விரும்பினால் அது தங்களுக்கெதிரானதாகவே அமையும் என்று கருதுகிறார்கள்.

பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு நீதி கிடைப்பதுதான் சாதகம் எனப்படும். தொடர்ந்து பாதகமான சூழ்நிலைகளால் வாழ்வையிழந்த மக்களுக்கு நீதிகிடைக்குமென்றால் அதுவே அவர்களுக்குச் சாதகமானது எனப்படுகிறது. ஆனால் உண்மையான அர்த்தத்தில் இதைத் தமிழர்களுக்குச்சாதகமானது என்று சொல்லமுடியாது. சாதகமானது என்றால் மற்றத்தரப்பை விடவும் அதிகமான வாய்ப்புகள் ஒருதரப்புக்குக்கிடைக்கும் என்பதாகும். ஆனால் இங்கேஅப்படி வாய்ப்பெதுவும் கிடைக்கும் என்றில்லை. அத்துடன் தமிழர்கள் மற்றவர்களின் வாய்ப்புகளையோ உரிமைகளையோ என்றைக்கும் கேட்டதாகவும் இல்லை. அப்படியெதையும் விரும்பியதுமில்லை.

ஆனால், இதைப்புரிந்துகொள்ள முடியாமல் சிங்களத்தரப்பினர் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். அதாவது தாமும் நீதியாக நடக்கத்தயாராகவில்லை. அதேவேளையில் மற்றவர்களையும் இந்தப்பிரச்சினையில் நீதியாக நடந்துகொள்வதற்கு அவர்கள் அனுமதிக்கிறார்களில்லை. இதுதான் அடிப்படைப் பிரச்சினையே.

இந்தப்பிரச்சினையின் பின்னாலுள்ள சிங்களவரின் உளவியற் சிக்கல் மிகவும் பாரதூரமானது.

ஆதிக்கத்திலோ மேல்நிலையிலோ இருக்கும் ஒரு தரப்பு இலேசில் நீதியாக நடப்பதற்கு என்றும் சம்மதிப்பதில்லை. வர்க்க நிலையிலும் சரி, சாதியமைப்பிலும் சரி, பால்நிலையிலும் சரி, நிறம் மற்றும் பிரதேச ரீதியாகவும் சரி இது தான் யதார்த்தமானது. இதுதான் நடந்தும் வருகிறது.

எனவே, ஆதிக்க நிலையில் இருக்கும் சிங்களத்தரப்பு சாதாரணமாக இந்த விசயத்தில் மாறிவிடும் என்று எதிர்பார்க்க முடியாது. இலகுவாக அது விட்டுக்கொடுப்புகளைச் செய்துவிடும் என்றும் எதிர்பார்க்கவும் முடியாது.

இவ்வாறு தமிழ்மக்களுக்கு நியாயம் கிடைக்கக்கூடிய தீர்வு முயற்சியை தவறாக விளங்கி அதற்கு எதிர்ப்புத்தெரிவிக்கும் பாரம்பரியமே இலங்கையில் தொடருகிறது. இதை ஒரு வகையான குருட்டுத்தனம் அல்லது அறிவீனம் என்றே சொல்லவேண்டும்.

இந்த ஆதிக்க மனத்தோடுதான் சிங்களவர்கள் எப்போதும் தமிழரின் பிரச்சினையைப் பார்க்கிறார்கள். இந்தப்பிரச்சினையின் தீர்வுக்காக முயற்சிப்போரையும் அவர்கள் இந்தக் கண்ணோட்டத்துடன்தான் நோக்குகிறார்கள்.

இது உள்நாட்டு நிலவரம் என்றால், சர்வதேச நிலவரம் எப்படியிருக்கிறது என்றும் நாம் பார்க்க வேண்டும்.

அமெரிக்கா இலங்கையில் தொடரும் மனித உரிமைகள் தொடர்பாக வருத்தம், கண்டனம் என்றவாறாக அறிக்கைகளைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. அதேவேளையில், அது சிறிலங்காவுக்கான ஆயுத உதவிகளையும் செய்கிறது. அத்துடன் வழமையைவிடவும் இந்த ஆண்டு சிறிலங்காவுக்கான அமெரிக்காவின் ஆயுத உதவி அதிகளவில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிர, பயங்கரவாதத்தை முறியடிப்பதற்காக என்று அது மேலதிக உதவிகளை அரசாங்கத்துக்கு வழங்கவும் தயாராக இருக்கிறது.

ஆனால், அந்த அளவுக்கு தமிழரின் உரிமைகள் தொடர்பில் அது அதிக கரிசனை கொண்டதாக இல்லை. அதற்கான எந்த நல்ல துலக்கமான சமிக்ஞைகளையும் அது காட்டவில்லை.

இதேபோலான நிலைப்பாட்டையே ஏறக்குறைய மொத்தமான மேற்குலகமும் எடுத்துள்ளது. அதாவது தாம் மனித உரிமை மீறல்களுக்கு எதிரானவர்கள் என்று அவர்கள் காட்டுகின்றனர். இதில் தமது கனவான்தனத்தை தாம் பேணுவதாகவும் நீதியாளர்களாக தாம் இருக்க முனைவதாகவும் நிரூபிக்கின்றனர்.

மறுபக்கத்தில் போருக்கு ஆதரவை வழங்குகின்றனர். அப்படி தாம் வழங்கும் ஆதரவுக்கு அழகான நியாயத்தையும் அவர்கள் சொல்கிறார்கள். இதற்குப்பின்னாலுள்ள சில உண்மைகளை நாம் இங்கே தெரிந்து கொள்ள வேண்டும்.

முதலில் இவற்றுக்கென்று தனியான நலன்சார்ந்த அரசியல் இருக்கின்றது. அந்த நலனின் அடிப்படையில்தான் அவர்களுடைய அனைத்து அணுகுமுறைகளும் இருக்கின்றன.

இப்போது பிரித்தானியாவில் இலங்கைப்பிரச்சினை தொடர்பான புதிய கரிசனை பாராளுமன்ற மட்டம் வரையில் ஏற்பட்டுள்ளது. இது வரவேற்க வேண்டியது. சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் மற்றும் தமிழ்மக்களுக்கெதிரான போர் நடவடிக்கைகள் வரையில் இங்கு கவனம் கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்கள் பலகாலம் தொடர்ச்சியாக பாடுபட்டதையும் நாம் நினைவிற் கொள்ள வேண்டும்.

ஆனாலும், இந்தக்கரிசனை என்பது, பிரித்தானிய அரசாங்கத்தின் முழு அளவிலான கரிசனையாக வளர்ச்சியடையுமா என்ற கேள்வியுண்டு. பிரித்தானிய பாராளுமன்ற மரபின்படி இத்தகைய அக்கறையை அது வெளியுலகம் பற்றி கொண்டிருப்பது வேறு. அதாவது பாராளுமன்றில் அங்கத்துவம் பெறும் தரப்பினர் அல்லது கட்சிகள் தமது அபிப்பிராயங்களையும் நிலைப்பாடுகளையும் கொண்டிருப்பதும் தெரிவிப்பதும் வேறு. பிரித்தானிய அரசாங்கம் எடுக்கும் தீர்மானம் என்பது வேறு. ஆனால் இந்தத்தரப்பினரின் விவாதப்பொருளை அரசாங்கம் மதிக்கும். அந்த மதிப்பை அரசாங்கத்தின் தீர்மானம் என நாம் அவசரப்பட்டுக் கருதிவிட முடியாது.

இன்னும் பிரித்தானிய அரசாங்கம் இலங்கைப்பிரச்சினை தொடர்பில் வெளிப்படையாகவும் தீர்மானமாகவும் எந்த அறிவிப்பையும் செய்துள்ளதாகத் தெரியவில்லை.

இதேபோலத்தான் பிரான்சும் ஏனைய நாடுகளும் இயங்குகின்றன. அதாவது, சிறிலங்காவின் மனிதவுரிமை மீறல்களை இந்த நாடுகள் பகிரங்கமாகக் கண்டிக்கின்றன. பதிலாக சிறிலங்கா அரசின் போருக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ அவை உதவுகின்றன.

முதலில் போரை இவை நிறுத்தினால் மனித உரிமைகள் பாதிக்குமேல் பேணப்படும். போர்ச்சூழலை இவை மாற்றமுயன்றால் மீதி உரிமை மீறல்களும் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். ஆனால் அதைச் செய்ய இந்த நாடுகள் விரும்பவில்லை. இது ஏன்.

போருக்கு வழங்கும் அங்கீகாரம் என்பது மனிதவுரிமைகள் மீறப்படுவதற்கு வழங்கப்படும் ஆதரவு என்றே கொள்ளப்படவேண்டும். போர் என்பதே மனித உரிமைக்கு எதிராகவேதான் நடத்தப்படுகிறது.

தமிழ்மக்களின் உரிமைகளை பறிக்கும் செயற்பாடென்பது அடிப்படையில் மனித உரிமை மீறலுடன் தொடர்பு பட்டதே. அதன் விளைந்த வடிவம்தான் போரும் ஏனைய ஜனநாயக மறுப்பு விசயங்களும்.

ஆக மிக நீண்ட காலமாக சிறிலங்கா அரசாங்கம் போரிலும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றது. அப்படியென்றால் அது நீண்டகாலமாகவே முழு அளவில் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டு வருகிறது.

அப்படி அது பெரும் குற்றச்செயலில் ஈடுபட்டு வரும்போது அதைப்பற்றி அக்கறைப்படாத சர்வதேச சமூகம் இப்போது திடீரென இப்படி அறிக்கைகளை விடத்தொடங்கியிருப்பது புதிய அரசியல் உத்தியாகவே இருக்கிறது.

இனப்பிரச்சினையுடன் தொடர்புடைய இரண்டுதரப்பினருக்கும்தாம் அழுத்தம் கொடுப்பதாக இப்போது இந்தச் சர்வதேச சமூகம் காட்டுகின்றது. ஆனால் உண்மை நிலைமை அப்படியிருப்பதாகத் தெரியவில்லை.

அரசாங்கத்துக்கு வெறுமனே கண்டனங்களை மட்டும் தெரிவித்துக்கொண்டு தமிழர் தரப்புக்கு அதாவது விடுதலைப்புலிகளின் தரபபுக்கு அதனைவிடத்தாக்கமேற்படுத்தக் கூடிய அழுத்தங்களையும் கொடுப்பதாகவே தெரிகிறது.

இது பாரபட்சமானது. அத்துடன், சிறிலங்கா அரசாங்கத்துக்கு எந்தவகையான பெரும்பாதிப்பையும் ஏற்படுத்தாதது. அதனால் சமாதான நிலையைநோக்கி அது திரும்புவதற்கான சூழ்நிலை இதில் அதிகமேற்பட வாய்ப்பில்லை.

பதிலாக தமிழரை நோக்கி போர் இன்னும் தீவிரப்படக்கூடிய சந்தர்ப்பமே அதிகமுண்டு.

இலங்கையின் முழு அளவிலான போர்ச்சூழலுக்கு சிறிலங்கா அரசாங்கமே பொறுப்பாகும் என்று சர்வ தேசத்துக்கு நன்றாகத் தெரியும். இதற்கு சர்வதேசப்பிரதிநதிகளாக இலங்கையிலிருக்கும் இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவும் நோர்வேப்பிரதிநிகளும் சாட்சி.

பேச்சுவார்த்தை நடந்த காலகட்டத்தில் நிகழ்ந்த பல நிகழ்ச்சிகளும் நடவடிக்கைகளும் இதற்காதாரமாகவுண்டு.

அப்படியென்றால், இது தொடர்பாக நேரடியாகவோ அல்லது வெளிப்படையாகவோ அதுவுமல்லாவிட்டால் கொஞ்சம் கூடிய நெருக்குவாரத்தையோ சர்வதேச சமூகம் சிறிலங்காவுக்குக்கொடுக்கலாம். ஆனால், அது அப்படிக் கொடுப்பதாகத் தெரியவில்லை.

பதிலாக விடுதலைப்புலிகளின் மீதுதான் மேலும் நெருக்குவாரங்களை ஏற்படுத்துவதாக உணர முடிகின்றது. அமெரிக்கா, இந்தோனேசியா, அவுஸ்ரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் தமிழ்மக்களின் துயர்துடைக்கும் நோக்குடன் செயற்பட்டு வந்தவர்களை தடுக்கும் விதமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இவ்வாறே தெரிகின்றன.

பெருந்தவறுக்குப் பொறுப்பாகவுள்;ள அரசாங்கத்தை மென்போக்காக கையாள்வதன் நோக்கம் இந்தத்தரப்பினரின் பொருளாதார மற்றும் அரசியல் நலன்சார்ந்ததாகவே இருக்கிறது. அந்த நலனில் பாதிப்பேற்படுத்தாதவாறு அவை இந்த விவகாரத்தைக் கையாள்கின்றன.

கொழும்பில் அவற்றுக்கிருக்கும் கரிசனையென்பது இதன்பாற்பட்டதே.

எனவே, தமிழ்மக்கள் இன்னும் தமது விடுதலைக்காகவும் துயரங்களுக்காகவும் பாடுபடவேண்டித்தான் உள்ளது. தாயகத்தில் போருக்கெதிராக போரிட வேண்டிய தமிழர்கள்.அதேபோல புலம்பெயர் தேசங்களில் சிறிலங்கா அரசின் நீதியின்மையை அம்பலப்படுத்தி தமிழ்மக்களின் அவலவாழ்வை வெளிப்படுத்தும் கவனயீர்ப்புப்போராட்டத்தில் புலம்பெயர்மக்கள். இந்த இருநிலைப் பங்களிப்பை பக்குவமாக தீவிரப்படுத்த வேண்டியேயுள்ளது.

விடுதலைக்கான பயணம் தொடரத்தான் வேண்டும்.

மூலம்: ஈழமுரசு